Saturday 13 January 2018

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!


அன்புடையீர்,

வணக்கம்!

நமது பகுதியின் வளர்ச்சிப் பணிக்காகவும், பாதுகாப்புக்காகவும் 2010-இல் துவக்கப்பட்ட விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்கம் ஆற்றிவரும் பணிகள் தாங்கள் அறிந்ததே.
  • விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்கத்தின் ஏற்பாட்டில் சமுதாயக் காவல் மையம் மூலமாக, காவலர் ஒருவர் இரவு நேரத்தில் தொடர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருவதால், நமது பகுதிகளில் குற்றங்கள் தடுக்கப்பட்டுள்ளன. அவருக்கு சங்கம் மூலமாக மாதாந்திர ஊதியம் வழங்கப்படுகிறது.
  • குடியிருப்போர் சங்கத்தின் முயற்சியால், 2012-இல் நமது பகுதி முழுவதும் தார் சாலைகளும் மின்விளக்கு வசதியும் மாநகராட்சியால் செய்து தரப்பட்டன. குடியிருப்புப் பகுதிகளில் உள்ள முட்புதர்களை அகற்றுவது, மரம் நடுவது போன்ற பணிகளிலும் சங்கம் ஈடுபட்டுள்ளது. 
  • நமது பகுதியின் மேற்குப் புறத்தில் உள்ள அணுகு சாலையை விரிவுபடுத்தி மாநில சாலையாக மாற்ற நெடுஞ்சாலைத் துறை 2014-இல் திட்டமிட்டபோது, நமது ஒருங்கிணைந்த முயற்சியால் அது தடுக்கப்பட்டு, பலரது வீடுகள் தப்பின. 
  • குடியிருப்போர் சங்க அலுவலக கட்டடத்தில் (400 சதுர அடி) சிறு குடும்ப விசேஷங்களை நடத்திக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இங்கு மகளிருக்கு யோகா பயிற்சிகள் காலை நேரங்களில் நடத்தப்படுகின்றன.

-இப்பணிகளை எந்தப் பிரதிபலனும் பாராமல் சங்கம் செய்து வருகிறது. ஆயினும், நமது பகுதியில் உள்ள வீடுகளின் எண்ணிக்கை 200-க்கு மேல் உள்ள நிலையில், இதுவரை நமது சங்கத்தில் 70 உறுப்பினர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். அவர்களிலும் முனைப்புடன் பாதிப் பேரே செயல்படுகின்றனர்.

நமது நன்மைக்காகச் செயல்படும் குடியிருப்போர் சங்கத்தின் பணிகளில் அனைவரும் இணைந்து செயல்படுவது அவசியமாகும். நாம் அனைவரும் சங்க உறுப்பினராக இணைந்து, மாதாந்திர சந்தாக் கட்டணம் செலுத்தினால், நமது பகுதியை மேலும் சிறப்பாக மேம்படுத்த முடியும்.

சங்கத்தின் நிதிநிலை நன்றாக இருந்தால், தூய்மைப் பிரதேசமாக நமது மூன்று குடியிருப்புப் பகுதிகளையும் மாற்ற முடியும். மேலும், நமது பகுதியை பசுமை வனமாக மாற்றவும், தெருமுனைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் திட்டமிட்டுள்ளோம். இவை நிறைவேற அனைவரது ஆதரவும் ஒத்துழைப்பும் அவசியம்.

நம் ஒவ்வொருவரும் அளிக்கும் நல்லாதரவே, சங்கத்தை வலுப்படுத்தும். கலி யுகத்தில் சங்கமே சக்தி! நமது ஒற்றுமையே நம்மைக் காக்கும்! எனவே, அனைவரும் நமது குடியிருப்போர் சங்கத்தில் உறுப்பினர் ஆவீர்! வாருங்கள் ஒன்றாய் இணைந்து நமது பகுதியை மேம்படுத்துவோம்!

-நிர்வாகிகள்,
விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்கம்.
13.01.2018