Wednesday 24 October 2012

சங்கத்தின் அரும்பணி: நடைப்பயிற்சி மைதானம் ஏற்பாடு

விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில், அமர்ஜோதி சத்தியமுர்த்தி நகரில்  உள்ள தனியாருக்குச் சொந்தமான நான்கு மனைகளில் (மனை உரிமையாளர்களின் ஒப்புதலுடன்) குவிந்திருந்த குப்பைகள், கற்களை அகற்றி, அங்கு நமது பகுதிப் பெண்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள வசதியாக மைதானம் தயார் செய்யப்பட்டுள்ளது.

மைதானத்தில் நடந்த நிலம் சமன் படுத்தும் பணியின்  படங்கள்  கீழே...






சங்கத்தின் அரும்பணி: முட்புதர்கள் அகற்றம்

விவேகானந்தா  குடியிருப்போர்  நலச் சங்கம் சார்பில், நமது பகுதியில் காலி இடங்களில் படர்ந்திருந்த  வேலி காத்தான் முட்புதர்கள் அனைத்தும் கடந்த அக்டோபார் 12 ம் தேதி  அகற்றப்பட்டன. இதற்காக சங்கம் சார்பில்  ரூ. 6500 செலவு செய்யப்பட்டது.

முட்புதர்கள் அகற்றப்பட்டது தொடர்பான படங்கள் இங்கே உள்ளன...











நமது அலுவலகம் - படங்கள்

 வி.கு.ந.சங்க அலுவலக கட்டடம்- தூரப்பார்வையில்...

வி.கு.ந. அலுவலக கட்டடம்- கிட்டப்பார்வையில்...


Saturday 20 October 2012

ஆயுதபூஜை அழைப்பிதழ்



 20.10.2012


பெறுநர்:
அனைத்து உறுப்பினர்கள்,
விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்கம்,
காங்கேய நகர், ஐஸ்வர்யா கார்டன், அமர்ஜோதி சத்தியமூர்த்தி நகர்,
காங்கயம் சாலை, திருப்பூர்.

ஆயுதபூஜை அழைப்பிதழ்
அன்புடையீர், 

    வணக்கம்.

    நமது பகுதியின் முன்னேற்றத்துக்காக 'விவேகானந்தா  குடியிருப்போர் நலச் சங்கம்' அமைத்து,  நம்மால் இயன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இதில் ஆர்வத்துடன் ஒத்துழைப்பு நல்கி வரும் அனைவருக்கும் நன்றி. 

    இம்மாதம்  நமது பகுதியில் உள்ள முட்புதர்கள் ரூ. 13,000 செலவில் அகற்றப்பட்டுள்ளன.  தவிர, சங்க அலுவலகத்தின் அருகில் உள்ள தனியார் இடத்தை அவர்களின்  அனுமதியுடன் சமன் செய்துள்ளோம். இந்த இடத்தில் காலை, மாலை வேளைகளில் நமது பகுதியில் உள்ள அனைவரும், குறிப்பாக பெண்கள் அனைவரும் நடைப்பயிற்சி மேற்கொள்ள முடியும்.  தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்வது நமது உடல்நலனுக்கு மிகவும் நல்லது. வரும் விஜயதசமி நாளில் இருந்து இங்கு நடைப்பயிற்சி மேற்கொள்ள அனைவரையும் அழைக்கிறோம். 

   நமது பகுதியின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட இரவுக்காவலர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இப்போது திரு. நீலகண்டன் என்ற ஒரு காவலர் மட்டும் பணியில் உள்ளார். அவரது அலைபேசி எண்: 85088 09096. தீபாவளிக்குப் பிறகு சந்தா வசூலைப் பொறுத்து கூடுதல் காவலரை நியமிக்க முடிவு செய்துள்ளோம். 

  வரும் 23.10.2012, செவ்வாய்க்கிழமை, காலை 8.00 மணியளவில், நமது VRWA சங்க அலுவலகத்தில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவுக்கு தாங்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறோம். 

  நன்றி.

நகல்: அலுவலக அறிவிப்புப் பலகை.


Tuesday 4 September 2012

உறுப்பினர்களுக்கு ஓர் அறிவிப்பு


அன்பார்ந்த உறுப்பினர்களுக்கு,

சமுதாயக்காவலர் அமைப்பு மூலமாக நமது பகுதியின் பாதுகாவல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இரவு ரோந்து நடைபெற்று வருவது தாங்கள் அறிந்ததே.

இந்நிலையில், இதற்குப் பொறுப்பாக நமது சங்கத்தால் நியமிக்கப்பட்டிருந்த திரு. சண்முகம் சரியாக பணிக்கு வராததால், அவரை நீக்கியுள்ளோம். அவருக்கு பதிலாக திரு. நீலகண்டன் என்பவரை இரவுக்காவலராக நியமனம் செய்துள்ளோம்.

இதுதொடர்பாக திருப்பூர் ஊரக காவல் நிலையத்திலும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவுக் காவலர் திரு. நீலகண்டனை எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம். அவரிடம் சங்கத்தின் மொபைல் பொன் கொடுக்கப்பட்டுள்ளது.

அதன் எண்: 88708 41454





என,
 நிர்வாகிகள்.

Saturday 21 April 2012

வி.கு.ந.சங்கத்தின் நற்பணி

மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்ட வாகனத்துடன் அதன் உரிமையாளர்
(வெள்ளை சட்டை அணிந்திருப்பவர்) திரு. ராமசாமி,
சமுதாயக் காவலர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள்.


விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் நமது பகுதியின் பாதுகாப்புக்காக சமுதாயக் காவல் அமைப்பு சார்பில் இரு காவலர்கள் நியமனம் செய்யப்பட்டிருப்பது அனைவரும் அறிந்ததே. இதற்காக நாம் மாதந்தோறும் ரூ. 13,000 ஊதியம் வழங்கி வருகிறோம். இந்த பாதுகாவல் பணியால், நமது பகுதியின் இரவு நேர பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  

இந்த சமுதாய காவல் பணியின் மற்றொரு நன்மை அண்மையில் உணரப்பட்டது. கடந்த வாரம் 15.04.2012 ஞாயிற்றுக் கிழமை இரவு 2 மணியளவில், காங்கேய நகர் முதல் வீதியில் இரு சக்கர வாகனத்தைத் தள்ளியபடி ஒருவர் சென்றுள்ளார். அவர் மீது சந்தேகம் கொண்டு நமது சமுதாயக் காவலர்கள் அவரை விசாரிக்க நெருங்கியுள்ளனர். உடனே, அந்த இளைஞர் தான் தள்ளிவந்த வாகனத்தை விட்டுவிட்டு ஓடிவிட்டார். அப்போதுதான் அந்த வாகனம் திருட்டு வாகனம் என்பதும், அதைத் தள்ளி வந்தவர் திருடர் என்பதும் தெரிய வந்தது.

அந்த வாகனம் டி.வி.எஸ்.  எக்ஸெல் ஹெவி டூட்டி (பதிவு எண்: TN 39 AP 4881). ஆனால் அதன் உரிமையாளர் யார் என்பது தெரியவில்லை. 

எனினும், காங்கேய நகரில் மீட்கப்பட்டதால், நமது பகுதியைச் சேர்ந்தவர்களின் வண்டியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில், நாம் வீடு வீடாக விசாரித்தோம். ஆனால், எங்கும் வாகனம் காணாமல் போனதாக தகவல் இல்லை. இதையடுத்து பதிவு எண்ணைக் கொண்டு வாகன உரிமையாளரை அறிய முயன்றோம்.

இதனிடையே,  அந்த வாகனத்தில் கிடந்த ஒரு துண்டுக் காகிதத்தில் கிடைத்த தெளிவற்ற மொபைல் எண் நமக்கு துப்பாகக் கிடைத்தது. அதில் கடைசி எண் தெளிவில்லாமல் இருந்தது. எனவே கடைசி எண்ணை மாற்றி மாற்றி அழைத்துப் பார்த்ததில், பலர் பேசினர். இறுதியில் வாகன் உரிமையாளரே பேசினார்.

கருவம்பாளையத்தைச் சேர்ந்த திரு. P.R.ராமசாமி என்பவரது வாகனம் வீட்டின் முன்பு பூட்டி நிறுத்தப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணியளவில் காணமல் போனதும், அது தொடர்பாக திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் அவர் புகார் செய்திருந்ததும் தெரிய வந்தது. அவர் தனது வாகனப் பதிவேட்டுடன் வந்து தனது வாகனம் தான் என்பதை உறுதிப் படுத்தினார்.

இதையடுத்து, திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில்  18.04.2012 புதன் கிழமை, மீட்கப்பட்ட வாகனம் ஒப்படைக்கப்பட்டது. திருப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் (சட்டம் ஒழுங்கு) திரு ஈஸ்வரனிடம் நமது சங்கத் தலைவர் திரு பி.சிவநாதன் வாகனத்தை ஒப்படைத்தார்.

அதன்பிறகு, முறையான ஆய்வுக்குப் பின், வண்டியின் உரிமையாளரிடம் காவல்துறையினர் அந்த வாகனத்தை அதே நாளில் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட வாகனத்தின் மதிப்பு : ரூ. 35 ஆயிரம் என்பது குறிப்பிடத் தக்கது.  

வாகனத்தைப் பெற்றுக் கொண்ட திரு. P.R.ராமசாமி, நமது சங்கத்துக்கு   21.04.2012, வெள்ளிக்கிழமை வந்தார். அப்போது தனது திருட்டு போன  வாகனத்தை  மீட்டு ஒப்படைத்த விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்கத்துக்கும், சமுதாயக் காவல் அமைப்பைச் சேர்ந்த காவலர்கள் திரு சண்முகம், திரு வீரப்பன் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்தார். வண்டியை மீட்ட சமுதாயக் காவலர்கள் இருவருக்கும் வெகுமதியாக ரூ. 500 ரொக்கமும் அன்பளிப்பாக அவர் தந்து சென்றார். 

தனது வாகனத்தை மீட்ட வி.கு.ந. சங்கத்தின் சமுதாயக் காவலர்கள் திரு சண்முகம், திரு. வீரப்பன் ஆகியோருடன், வாகனத்தின் உரிமையாளர் கருவம்பாளையம் திரு பி.ஆர்.ராமசாமி.


இந்நிகழ்வு மிகவும் நெகிழ்ச்சியூட்டுவதாக இருந்தது.  தலைவர் திரு பி.சிவநாதன், செயலாளர் திரு வ.மு.முரளி, செயற்குழு உறுப்பினர்கள் திருவாளர்கள் பி.ராமசாமி, ஆர்.செல்வராஜ், ஆர்.பால்ராஜ், பி.முருகேசன் ஆகியோரும் அப்போது இருந்தனர். 

நமது பகுதியின் பாதுகாப்புக்காக ஏற்பாடு செய்யப்பட சமுதாயக் காவலர் அமைப்பு, திருப்பூரின் வேறொரு பகுதியில் உள்ள ஒருவரது வாகனத்தை மீட்டுக் கொடுத்திருப்பது நமக்கு பெருமிதம் அளிப்பதாகும். இதனை திருப்பூர் தெற்கு காவல் ஆய்வாளர் திரு ஈஸ்வரன் பாராட்டினார். 


.

 

Friday 20 April 2012

நல்லூர் மண்டலத் தலைவரிடம் அளித்த மனு



விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்கம்
அமர்ஜோதி சத்யமூர்த்தி நகர், ஐஸ்வர்யா கார்டன், காங்கேய நகர்.
காங்கயம் சாலை, திருப்பூர் - 641 604.

 20.04.2012

பெறுனர்:

உயர்திரு. மண்டலத் தலைவர் அவர்கள்,  
நல்லூர் மண்டலம், (மாமன்ற உறுப்பினர், 40வது வார்டு),
திருப்பூர் மாநகராட்சி,
திருப்பூர்.


பொருள்: எமது பகுதியில் உள்ள தீர்வு காணப்பட வேண்டிய பிரச்னைகள்.

 
மதிப்பிற்குரிய ஐயா,
வணக்கம்.

         திருப்பூர் மாநகராட்சியின் நல்லூர் மண்டலத்துக்கு உள்பட்ட 44 வது வார்டில் அமர்ஜோதி சத்யமூர்த்தி நகர்,  ஐஸ்வர்யா கார்டன் பகுதிகள் உள்ளன. 40 வது வார்டில் காங்கேய நகர் உள்ளது. இம்மூன்று பகுதி குடியிருப்போரும் இணைந்து அமைத்துள்ள சங்கம், விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்கம் ஆகும்.  

        எங்கள் பகுதியில் நிலவும் அடிப்படைப் பிரச்னைகளை தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறோம். இவற்றுக்கு மாநகராட்சி நிர்வாகம் தகுந்த தீர்வு காண உதவுமாறு வேண்டுகிறோம்.

          நன்றி.


காண்க:   எமது பகுதியில் கவனம் செலுத்த வேண்டிய பிரச்னைகள் (இணைப்பு).

இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள,


P .சிவநாதன்
(தலைவர்)

நகல்கள்:

வணக்கத்துக்குரிய மேயர் அவர்கள், திருப்பூர் மாநகராட்சி.
உயர்திரு, ஆணையர், திருப்பூர் மாநகராட்சி.
உயர்திரு துணை மேயர், திருப்பூர் மாநகராட்சி.
உயர்திரு மாமன்ற உறுப்பினர், 44 வது வார்டு, திருப்பூர் மாநகராட்சி.


***





எமது பகுதியில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகள்

1. குப்பை சேகரிப்பு:
) எமது பகுதியில் வீடு வீடாக குப்பை சேகரிக்க ஆட்கள் வருவது சமீப காலமாக குறைந்துள்ளது. தினசரி குப்பை சேகரிப்போர் வர ஏற்பாடு  செய்ய வேண்டும்.
) அமர்ஜோதி சத்யமூர்த்தி நகர், ஐஸ்வர்யா கார்டன், காங்கேய நகர் ஆகிய மூன்று பகுதிகளிலும் குப்பைத் தொட்டிகளை பொது இடத்தில் வைக்க வேண்டும்.

2. சாக்கடை பராமரிப்பு:
) இப்பகுதிகளில் உள்ள சாக்கடைகளை வாரம் ஒருமுறையாவது   தூர் வார ஏற்பாடு செய்ய வேண்டும்.
) அமர்ஜோதி சத்தியமுர்த்தி நகரில் ஒரு தெருவில் விடுபட்டுள்ள சாக்கடை  பணியைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
இ) காங்கேய நகர், முதல் வீதியில் சாக்கடை முழுமையாக  அமைக்க  
 வேண்டியுள்ளது

3. குடிநீர் விநியோகம்:
) எமது பகுதிக்கு சீராக குடிநீர் விநியோகிக்க வேண்டும். ஒரு மாதத்துக்கு முன் சுமார் 20 நாட்கள் குடிநீர் வழங்கப்படாததால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.
) காங்கேய நகர் பகுதியில் பொது குடிநீர்க் குழாய்கள் உள்ளன. அதே போல, ஐஸ்வர்யா கார்டன், அமர்ஜோதி சத்யமூர்த்தி நகர் பகுதிகளிலும் பொதுக் குழாய்களை அமைக்க வேண்டும்

4. தெருநாய்கள் தொல்லை.
எமது பகுதியில் 20 க்கு மேற்பட்ட தெருநாய்கள் திரிகின்றன. இவை அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டு சாலையில் செல்வோர் மீது பாய்கின்றன. இரவில் நாய்கள் சண்டையிட்டுக் கொண்டு குரைப்பதால் மக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. அசம்பாவிதங்கள் நிகழும் முன், தெருநாய்களைப் பிடித்து அப்புறப்படுத்த ஆவன செய்ய வேண்டும்.

5. தெருவிளக்குகள்:
) எமது பகுதியில் பல தெருவிளக்குகள் எரியாத நிலையில் உள்ளன. இவற்றை பழுது பார்க்க வேண்டும்.
) காங்கேய நகர் முதல் தெருவும் அமர்ஜோதி சத்யமூர்த்தி நகர் சாலையும் இணையும் இடத்தில் சோடியம் ஒளிவிளக்கு பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6. தார்ச்சாலை அமைப்பு:
) அமர்ஜோதி சத்யமூர்த்தி நகர், ஐஸ்வர்யா கார்டன் பகுதிகளில் சிறப்பு திட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இப்பணி தரமின்றி செய்யப் பட்டுள்ளதால்,  இப்போதே சாலை பல இடங்களில் பெயர்ந்துள்ளது. இதனை ஆய்வு செய்து சரி செய்ய வேண்டும்.
) ஐஸ்வர்யா கார்டனில் ஒரு சந்தில் தார்ச்சாலை அமைக்கப்படாமல் உள்ளது. அங்கு புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும்.
) காங்கேய நகரில் முதல் தெருவிலும் குறுக்கு சந்துகளிலும் தார்ச்சாலை அமைக்கப் படாமல் உள்ளது. இந்த சாலையில் வாகனங்கள்  செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. இங்கு சாலை அமைக்க உத்தரவிட வேண்டும்.

வேண்டுகோள்:
எமது பகுதியில் சுமார் 150 வீடுகள் உள்ளன; 200 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. எனவே மேற்கண்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து உதவுமாறு மாநகராட்சி நிர்வாகத்தை வேண்டுகிறோம்.

இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,

P.சிவநாதன்
(தலைவர், விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்கம்)
(மொபைல் எண்:  93457 30969)

.