Saturday 27 August 2011

சிந்திக்க சில நிமிடம் - 2


அண்ணா ஹசாரேவுக்கு ஆதரவாக திருப்பூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஒரு காட்சி

'மக்கள் லோக்பால்' மசோதா என்பது என்ன?
இன்று நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பது, சமூக சேவகர் திரு. அண்ணா ஹசாரே  தில்லியில் 11 நாட்களாக  இருந்துவரும் தொடர் உண்ணாவிரதம். நாட்டில் நிலவும் ஊழல்களால் வெதும்பிய மக்களின் மனக் குமுறல்களுக்கு வடிகாலாக ஹசாரே உண்ணாவிரதம் இருப்பதால்தான், நாடு முழுவதும் அவருக்கு மாபெரும் ஆதரவு கிடைத்திருக்கிறது.

இந்நிலையில், ஹசாரே குழுவினர் முன்வைக்கும் ஜன லோக்பால் (மக்கள் லோக்பால்) மசோதா குறித்து இன்று நமது நாடாளுமன்றத்தில் விவாதம் துவங்கி உள்ளது. ஆனால், ஜன லோக்பால் என்றால் என்னவென்று பெரும்பாலோருக்கு தெரிவதில்லை. நமது சங்க உறுப்பினர்கள் இதுகுறித்து அறிவது அவசியம் என்ற முறையில், கீழ்க்கண்ட விபரங்கள் இங்கு அளிக்கப்பட்டுள்ளன.

சட்டம் என்பது- அதை நடைமுறைப்படுத்தும் அதிகார வர்க்கம் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கையில் மட்டும் இருக்காமல், அதிகாரிகளுக்கு சம்பளம் கொடுக்கும், பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும்  மக்கள் கட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டும் என்பதே மக்கள் லோக்பாலின் சாராம்சம். இந்த தகவல்களை அளித்த தேசமே தெய்வம் வலைப்பூவுக்கு நன்றி.

குறிப்பு: கீழுள்ள படங்களை சொடுக்கினால் படம் பெரிதாகும்.
                   அதை தெளிவாகப் படிக்க முடியும்.














Tuesday 16 August 2011

வி.கு.ந.சங்கத்தின் சுதந்திர தின விழா

 
விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில், அமர்ஜோதி சத்தியமுர்த்தி  நகரில் அமைக்கப்பட்டுள்ள சமுதாயக் காவல் மையத்தில் 15.08.2011 அன்று காலை  8.45 மணியளவில் சுதந்திரதின விழா சிறப்பாக நடைபெற்றது.
 
துணைத் தலைவர் பி.செல்லமுத்து தலைமை தாங்கினார். மற்றொரு துணைத் தலைவர் கே.பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். பொருளாளர் எஸ்.சுந்தரம் வரவேற்றார். பணிநிறைவு  ஆசிரியர் ஆர்.முத்துவேலு தேசியக்கொடி ஏற்றினார்.
 
சிறப்புரை ஆற்றிய சங்கத்தின் தலைவர் பி.சிவநாதன், ''அரும்பாடுபட்டு பெற்ற சுதந்திரம் ஊழல் அரசியல்வாதிகளால் நாசமாவதாகவும், அதற்கு எதிராக நாட்டுப்பற்றுள்ள மக்கள் ஒன்றிணைய வேண்டுமென்றும்'' கூறினார்.
 
சங்கத்தின் துணை செயலாளர் எல்.ராமசந்திரன் நன்றி கூறினார். தேசியகீதத்துடன் விழா இனிதே நிறைவடைந்தது.
 

Sunday 14 August 2011

சுதந்திர தின விழா அழைப்பிதழ்




நாள்                        :  15.08.2011,  திங்கள்கிழமை


நேரம்                      :  சரியாக காலை 8.00 மணி


தலைமை            :  திரு. P.செல்லமுத்து 
                                       துணைத் தலைவர்வி.கு.. சங்கம்.


முன்னிலை         :  திருK.பாலசுப்பிரமணியம் 
                                        துணைத் தலைவர்வி.கு.. சங்கம்.


வரவேற்புரை          திரு. S. சுந்தரம் 
                                           பொருளாளர், வி.கு..சங்கம்  


தேசியக் கொடியேற்றம் :  திருR.முத்துவேலு
                                           தலைமை ஆசிரியர் (ஓய்வு


விழா உரை         :  திரு. P.சிவநாதன்
                                         தலைவர்வி.கு.. சங்கம்.

நன்றியுரை            :  திரு. L.ராமசந்திரன் 
                                         துணை செயலாளர், வி.கு..சங்கம். 




அமுத மொழி

இந்தியா எழுச்சி பெறும் - உடல் பலத்தால் அல்ல, ஆன்மிக பலத்தால்; அழிவின் சின்னத்தால் அல்ல, அமைதியென்னும் கொடியால். இளைஞர்களே, என் நம்பிக்கை உங்களிடம் தான் இருக்கிறது. உங்கள் நாட்டின் அழைப்பிற்கு செவி சாய்ப்பீர்களா?

... முழு வேலையும் உங்கள் தோள்மீது இருப்பதாக எண்ணுங்கள். எனது தாய்நாட்டு இளைஞர்களே, இதை சாதிப்பதற்காக பிறந்தவர்கள் என்று நினையுங்கள். களத்தில் இறங்குங்கள்!                                                                              
 -சுவாமி விவேகானந்தர்.


Saturday 13 August 2011

நமது சங்க விழா- தினமணி செய்தி


பாதுகாப்பை உறுதிப்படுத்த
மக்கள் ஒன்றிணைவது அவசியம்

திருப்பூர் காவல் துணை கண்காணிப்பாளர்
திரு.ஆர்.ராஜாராம்

திருப்பூர்,  ஆக. 10:  நகர்ப்புற மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திட காவல்துறையை மட்டும் எதிர்பார்க்காமல் மக்களும் ஒன்றிணைய வேண்டியது அவசியம் என்று, டிஎஸ்பி ஆர்.ராஜாராம் தெரிவித்தார்.

நாளுக்குநாள் திருப்பூரில் அதிகரித்து வரும் திருட்டு, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்சம்பவங்களைத்   தடுக்க காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இருப்பினும், அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப காவலர்களின் எண்ணிக்கை இல்லாததால் பாதுகாப்பை என்பது முழுமைப்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது.

இச்சூழ்நிலையில், திருப்பூர் மாநகராட்சி, 41வது வார்டுக்கு உட்பட்ட காங்கயம் சாலை- ஐஸ்வர்யா கார்டன், காங்கேய நகர், அமர்ஜோதி சத்யமூர்த்தி நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த குடியிருப்புவாசிகள் இணைந்து 'விவேகானந்தர் குடியிருப்போர் நலச் சங்கம்' ஏற்படுத்தி கடந்த 3 மாதங்களாக செயல்படுத்தி வருகின்றனர்.

பாதுகாப்பு மற்றும் பிற நலனுக்காக அமைக்கப்பட்டுள்ள இச்சங்கம் மூலம் தற்போது ஊதிய அடிப்படையில் சமுதாய காவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்கான சமுதாய காவல் மைய திறப்பு விழா புதன்கிழமை நடந்தது. மையத்தை திறந்து வைத்து டிஎஸ்பி ஆர்.ராஜாராம் பேசியது:

எந்தவொரு நாட்டிலும் 30 மக்களுக்கு ஒரு காவலர்கள் இருந்தாலே பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்கிறது ஐ.நா.சபை. ஆனால் பல்வேறு சமுதாயம், கலசாரம், இனக்கூறுகள் கொண்ட இந்தியாவில் 675 பேருக்கு ஒரு காவலர் மட்டுமே உள்ளனர். இந்த வேறுபாட்டை சரிகட்ட நமக்கு நாமே திட்டத்தால் மட்டுமே முடியும்.

குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து சங்கம் அமைத்து அதன் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதால் இவ்வேறுபாட்டை தவிர்க்கலாம். அதை விவேகானந்தர் குடியிருப்போர் சங்கம் செய்திருப்பது வரவேற்புக்குரியது.

சமுதாயம் காவல் மையம் அமைப்பதோடு பாதுகாப்பை உறுதிப்படுத்திவிட முடியாது. அதற்கான விதிகளுக்கு நடைமுறையில் மதிப்பளிக்க வேண்டும். தவிர, பகல் நேரங்களில் அப்பகுதியில் வந்துசெல்லும் வெளிநபர்களிடம் கேள்வி எழுப்பதும்,  சந்தேகப்பார்வையுடன் விசாரிப்பதும் அவசியம். வீடுகளில் வேலைக்கு சேர்க்கும் முன்பு சம்பந்தப்பட்ட நபர்களின் பின்னணியை தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.

மேலும், வெளியே செல்லும்போது வீடுகளின் உள்புறத்தில் பூட்டுவது, வீடுகளினுள் விளக்குகளை எரியவிடுவது, பீரோக்களின் சாவிகளை யூகிக்க முடியாத இடங்களில் வைப்பதும் திருடர்களின் கவனத்தை திசை திருப்பும் வழிகள். இதுதவிர, வீடுகள் கட்டும் போதே பாதுகாப்பான கதவுகள் உள்ளிட்ட பொருட்களை தேர்வு செய்து பயன்படுத்துவதும் காலத்தின் அவசியம் என்றார்.

முன்னதாக நிகழ்ச்சிக்கு கவுன்சிலர் ஏ.ஷாஜஹான் தலைமை வகித்தார். காவல் ஆய்வாளர்கள் ஈஸ்வரன், வெற்றிவேந்தன், சங்கத் தலைவர் பி.சிவநாதன், தொழிலதிபர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நன்றி: தினமணி (11.08.2011)

காண்க: படங்கள்

Thursday 11 August 2011

சமுதாயக் காவல் மையம் திறப்பு விழா




விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்கத்தின் சமுதாயக் காவல் மைய  சோதனைச் சாவடியைத் திறந்துவைக்கிறார்,  திருப்பூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ஆர்.ராஜாராம்.
  


விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்கத்தின்  பெயர்ப்பலகையைத்   திறந்துவைத்த திருப்பூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ஆர்.ராஜாராம் அவர்களுடன் சங்க நிர்வாகிகள். திருப்பூர் தெற்கு காவல் ஆய்வாளர் திரு. ஈஸ்வரன், 41 வது வார்டு மான்ற உறுப்பினர் திரு ஷாஜகான் ஆகியோரும் உடன் உள்ளனர்.

Tuesday 9 August 2011

சிந்திக்க சில நிமிடம் - 1

கொள்ளையனே வெளியேறு!
 
 
நன்றி: மதி/ தினமணி (09.08.2011)
 
குறிப்பு:
70  ஆண்டுகளுக்கு முன் இதே நாட்டில் மகாத்மா காந்தியால்  துவங்கப்பட்டது  
வெள்ளையனே வெளியேறு (QUIT INDIA MOVEMENT) இயக்கம்.

Sunday 7 August 2011

மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பம்

திரு.எம்.மதிவாணன் 

திருப்பூர் மாவட்ட ஆட்சியர்


நமது சங்கத்தின் நிர்வாகிகள் அனைவரும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உயர்திரு. எம்.மதிவாணன் அவர்களை 19.07.2011  அன்று அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது 'குடிமக்களே பொறுப்புணர்வுடன் ஒருங்கிணைத்து சங்கம் அமைத்து தங்கள் பகுதியின் நலன் காக்கப் பாடுபடுவது பாராட்டிற்குரியது' என்று மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.

'விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்கத்தின் ஆக்கப்பூர்வமான முயற்சிகளுக்கு அரசு சார்பில் இயன்ற உதவிகளை செய்வதாகவும்' ஆட்சியர் உறுதி அளித்தார்.

அப்போது, அவரிடம் சங்கம் சார்பில் ஒரு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.  
காங்கயம்  சாலையிலுள்ள டி.எஸ்.கே மருத்துவமனை அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தை இடம் மாற்ற ஆவன செய்யுமாறு கோரி, இந்த மனு அளிக்கப்பட்டது.
அவரிடம்  அளிக்கப்பட மனு இது:

-----------------

பெறுனர்:

உயர்திரு. மாவட்ட ஆட்சியர், 
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
திருப்பூர்.


மதிப்பிற்குரிய ஐயா,

வணக்கம்.


பொருள்: பேருந்து நிறுத்தம் இடமாற்றம் கோரி விண்ணப்பம்.

     திருப்பூர் காங்கயம்  சாலையில்,   டி.எஸ்.கே   மருத்துவமனை   பேருந்து நிறுத்தம்  உள்ளது  இங்கு  நகரப் பேருந்துகளும்   விரைவுப் பேருந்துகளும்  நின்று செல்கின்றனஇச்சாலையின்  இடப்புறம் கதிர்நகர்  செல்லும் தெருவும்,  வலப்புறம் அமர்ஜோதி கார்டன் செல்லும் சாலையும் உள்ளன. இருபுறமும் இருந்து பிரதான சாலையான காங்கயம் சாலைக்கு வாகனங்கள் வந்துசேரும் இடமான டி.எஸ்.கே மருத்துவமனை அருகே பேருந்து  நிறுத்தம் இருப்பதால், அடிக்கடி இப்பகுதியில் சாலைவிபத்துக்கள் ஏற்படுகின்றன.

    கடந்த ஆறு மாதங்களில்  சிறியதும் பெரியதுமாக பத்துக்கு மேற்பட்ட  விபத்துக்கள் இங்கு நேரிட்டுள்ளன. இதுவரை மூவர்  விபத்துக்களில்   உயிரிழந்துள்ளனர். காலை, மாலை நேரங்களில் நெரிசலான  போக்குவரத்து நேரங்களில் இப்பகுதியில் சாலையைக் கடப்பதும் கூட சிரமமாக உள்ளது. இந்நிலையில் மருத்துவமனை முன்புறம் நிற்கும் வாகனங்களாலும் சிக்கல் ஏற்படுகிறது.

    எனவே, டி.எஸ்.கே மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தை சற்றே கிழப்புறமாக 50  அடி தூரம் தள்ளி அமைத்தால் அனைவருக்கும்  நன்மையாக   இருக்கும்இது தொடர்பாக பத்திரிகைகளிலும் ஏற்கனவே செய்திகள் வந்துள்ளன. இது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு பணிவன்புடன் வேண்டுகிறோம்.

    நன்றி.
தங்கள் உண்மையுள்ள,
P.சிவநாதன்
(தலைவர்)
19.07.2011

----------------

இதுகுறித்து  அதிகாரிகளிடம் ஆலோசித்து, குறிப்பிட்ட இடத்தில் ஆய்வு செய்து, தக்க நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி அளித்தார். 

ஆட்சியருடனான சந்திப்பு சங்க நிர்வாகிகளுக்கு உற்சாகம் ஊட்டுவதாக அமைந்திருந்தது.

குறிப்பு: இது குறித்த செய்தி தினமணி நாளிதழில் (24.07.2011) வெளியாகியுள்ளது.
.