Saturday 21 April 2012

வி.கு.ந.சங்கத்தின் நற்பணி

மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்ட வாகனத்துடன் அதன் உரிமையாளர்
(வெள்ளை சட்டை அணிந்திருப்பவர்) திரு. ராமசாமி,
சமுதாயக் காவலர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள்.


விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் நமது பகுதியின் பாதுகாப்புக்காக சமுதாயக் காவல் அமைப்பு சார்பில் இரு காவலர்கள் நியமனம் செய்யப்பட்டிருப்பது அனைவரும் அறிந்ததே. இதற்காக நாம் மாதந்தோறும் ரூ. 13,000 ஊதியம் வழங்கி வருகிறோம். இந்த பாதுகாவல் பணியால், நமது பகுதியின் இரவு நேர பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  

இந்த சமுதாய காவல் பணியின் மற்றொரு நன்மை அண்மையில் உணரப்பட்டது. கடந்த வாரம் 15.04.2012 ஞாயிற்றுக் கிழமை இரவு 2 மணியளவில், காங்கேய நகர் முதல் வீதியில் இரு சக்கர வாகனத்தைத் தள்ளியபடி ஒருவர் சென்றுள்ளார். அவர் மீது சந்தேகம் கொண்டு நமது சமுதாயக் காவலர்கள் அவரை விசாரிக்க நெருங்கியுள்ளனர். உடனே, அந்த இளைஞர் தான் தள்ளிவந்த வாகனத்தை விட்டுவிட்டு ஓடிவிட்டார். அப்போதுதான் அந்த வாகனம் திருட்டு வாகனம் என்பதும், அதைத் தள்ளி வந்தவர் திருடர் என்பதும் தெரிய வந்தது.

அந்த வாகனம் டி.வி.எஸ்.  எக்ஸெல் ஹெவி டூட்டி (பதிவு எண்: TN 39 AP 4881). ஆனால் அதன் உரிமையாளர் யார் என்பது தெரியவில்லை. 

எனினும், காங்கேய நகரில் மீட்கப்பட்டதால், நமது பகுதியைச் சேர்ந்தவர்களின் வண்டியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில், நாம் வீடு வீடாக விசாரித்தோம். ஆனால், எங்கும் வாகனம் காணாமல் போனதாக தகவல் இல்லை. இதையடுத்து பதிவு எண்ணைக் கொண்டு வாகன உரிமையாளரை அறிய முயன்றோம்.

இதனிடையே,  அந்த வாகனத்தில் கிடந்த ஒரு துண்டுக் காகிதத்தில் கிடைத்த தெளிவற்ற மொபைல் எண் நமக்கு துப்பாகக் கிடைத்தது. அதில் கடைசி எண் தெளிவில்லாமல் இருந்தது. எனவே கடைசி எண்ணை மாற்றி மாற்றி அழைத்துப் பார்த்ததில், பலர் பேசினர். இறுதியில் வாகன் உரிமையாளரே பேசினார்.

கருவம்பாளையத்தைச் சேர்ந்த திரு. P.R.ராமசாமி என்பவரது வாகனம் வீட்டின் முன்பு பூட்டி நிறுத்தப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணியளவில் காணமல் போனதும், அது தொடர்பாக திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் அவர் புகார் செய்திருந்ததும் தெரிய வந்தது. அவர் தனது வாகனப் பதிவேட்டுடன் வந்து தனது வாகனம் தான் என்பதை உறுதிப் படுத்தினார்.

இதையடுத்து, திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில்  18.04.2012 புதன் கிழமை, மீட்கப்பட்ட வாகனம் ஒப்படைக்கப்பட்டது. திருப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் (சட்டம் ஒழுங்கு) திரு ஈஸ்வரனிடம் நமது சங்கத் தலைவர் திரு பி.சிவநாதன் வாகனத்தை ஒப்படைத்தார்.

அதன்பிறகு, முறையான ஆய்வுக்குப் பின், வண்டியின் உரிமையாளரிடம் காவல்துறையினர் அந்த வாகனத்தை அதே நாளில் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட வாகனத்தின் மதிப்பு : ரூ. 35 ஆயிரம் என்பது குறிப்பிடத் தக்கது.  

வாகனத்தைப் பெற்றுக் கொண்ட திரு. P.R.ராமசாமி, நமது சங்கத்துக்கு   21.04.2012, வெள்ளிக்கிழமை வந்தார். அப்போது தனது திருட்டு போன  வாகனத்தை  மீட்டு ஒப்படைத்த விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்கத்துக்கும், சமுதாயக் காவல் அமைப்பைச் சேர்ந்த காவலர்கள் திரு சண்முகம், திரு வீரப்பன் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்தார். வண்டியை மீட்ட சமுதாயக் காவலர்கள் இருவருக்கும் வெகுமதியாக ரூ. 500 ரொக்கமும் அன்பளிப்பாக அவர் தந்து சென்றார். 

தனது வாகனத்தை மீட்ட வி.கு.ந. சங்கத்தின் சமுதாயக் காவலர்கள் திரு சண்முகம், திரு. வீரப்பன் ஆகியோருடன், வாகனத்தின் உரிமையாளர் கருவம்பாளையம் திரு பி.ஆர்.ராமசாமி.


இந்நிகழ்வு மிகவும் நெகிழ்ச்சியூட்டுவதாக இருந்தது.  தலைவர் திரு பி.சிவநாதன், செயலாளர் திரு வ.மு.முரளி, செயற்குழு உறுப்பினர்கள் திருவாளர்கள் பி.ராமசாமி, ஆர்.செல்வராஜ், ஆர்.பால்ராஜ், பி.முருகேசன் ஆகியோரும் அப்போது இருந்தனர். 

நமது பகுதியின் பாதுகாப்புக்காக ஏற்பாடு செய்யப்பட சமுதாயக் காவலர் அமைப்பு, திருப்பூரின் வேறொரு பகுதியில் உள்ள ஒருவரது வாகனத்தை மீட்டுக் கொடுத்திருப்பது நமக்கு பெருமிதம் அளிப்பதாகும். இதனை திருப்பூர் தெற்கு காவல் ஆய்வாளர் திரு ஈஸ்வரன் பாராட்டினார். 


.

 

No comments:

Post a Comment