![]() |
திரு.எம்.மதிவாணன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் |
நமது சங்கத்தின் நிர்வாகிகள் அனைவரும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உயர்திரு. எம்.மதிவாணன் அவர்களை 19.07.2011 அன்று அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது 'குடிமக்களே பொறுப்புணர்வுடன் ஒருங்கிணைத்து சங்கம் அமைத்து தங்கள் பகுதியின் நலன் காக்கப் பாடுபடுவது பாராட்டிற்குரியது' என்று மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.
'விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்கத்தின் ஆக்கப்பூர்வமான முயற்சிகளுக்கு அரசு சார்பில் இயன்ற உதவிகளை செய்வதாகவும்' ஆட்சியர் உறுதி அளித்தார்.
அப்போது, அவரிடம் சங்கம் சார்பில் ஒரு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
காங்கயம் சாலையிலுள்ள டி.எஸ்.கே மருத்துவமனை அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தை இடம் மாற்ற ஆவன செய்யுமாறு கோரி, இந்த மனு அளிக்கப்பட்டது.
அவரிடம் அளிக்கப்பட மனு இது:
-----------------
பெறுனர்:
உயர்திரு. மாவட்ட ஆட்சியர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
திருப்பூர்.
மதிப்பிற்குரிய ஐயா,
வணக்கம்.
பொருள்: பேருந்து நிறுத்தம் இடமாற்றம் கோரி விண்ணப்பம்.
திருப்பூர் - காங்கயம் சாலையில், டி.எஸ்.கே மருத்துவமனை பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கு நகரப் பேருந்துகளும் விரைவுப் பேருந்துகளும் நின்று செல்கின்றன. இச்சாலையின் இடப்புறம் கதிர்நகர் செல்லும் தெருவும், வலப்புறம் அமர்ஜோதி கார்டன் செல்லும் சாலையும் உள்ளன. இருபுறமும் இருந்து பிரதான சாலையான காங்கயம் சாலைக்கு வாகனங்கள் வந்துசேரும் இடமான டி.எஸ்.கே மருத்துவமனை அருகே பேருந்து நிறுத்தம் இருப்பதால், அடிக்கடி இப்பகுதியில் சாலைவிபத்துக்கள் ஏற்படுகின்றன.
கடந்த ஆறு மாதங்களில் சிறியதும் பெரியதுமாக பத்துக்கு மேற்பட்ட விபத்துக்கள் இங்கு நேரிட்டுள்ளன. இதுவரை மூவர் விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். காலை, மாலை நேரங்களில் நெரிசலான போக்குவரத்து நேரங்களில் இப்பகுதியில் சாலையைக் கடப்பதும் கூட சிரமமாக உள்ளது. இந்நிலையில் மருத்துவமனை முன்புறம் நிற்கும் வாகனங்களாலும் சிக்கல் ஏற்படுகிறது.
எனவே, டி.எஸ்.கே மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தை சற்றே கிழப்புறமாக 50 அடி தூரம் தள்ளி அமைத்தால் அனைவருக்கும் நன்மையாக இருக்கும். இது தொடர்பாக பத்திரிகைகளிலும் ஏற்கனவே செய்திகள் வந்துள்ளன. இது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு பணிவன்புடன் வேண்டுகிறோம்.
நன்றி.
தங்கள் உண்மையுள்ள,
P.சிவநாதன்
(தலைவர்)
19.07.2011
----------------
இதுகுறித்து அதிகாரிகளிடம் ஆலோசித்து, குறிப்பிட்ட இடத்தில் ஆய்வு செய்து, தக்க நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி அளித்தார்.
ஆட்சியருடனான சந்திப்பு சங்க நிர்வாகிகளுக்கு உற்சாகம் ஊட்டுவதாக அமைந்திருந்தது.
குறிப்பு: இது குறித்த செய்தி தினமணி நாளிதழில் (24.07.2011) வெளியாகியுள்ளது.
.
No comments:
Post a Comment