Saturday 13 August 2011

நமது சங்க விழா- தினமணி செய்தி


பாதுகாப்பை உறுதிப்படுத்த
மக்கள் ஒன்றிணைவது அவசியம்

திருப்பூர் காவல் துணை கண்காணிப்பாளர்
திரு.ஆர்.ராஜாராம்

திருப்பூர்,  ஆக. 10:  நகர்ப்புற மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திட காவல்துறையை மட்டும் எதிர்பார்க்காமல் மக்களும் ஒன்றிணைய வேண்டியது அவசியம் என்று, டிஎஸ்பி ஆர்.ராஜாராம் தெரிவித்தார்.

நாளுக்குநாள் திருப்பூரில் அதிகரித்து வரும் திருட்டு, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்சம்பவங்களைத்   தடுக்க காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இருப்பினும், அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப காவலர்களின் எண்ணிக்கை இல்லாததால் பாதுகாப்பை என்பது முழுமைப்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது.

இச்சூழ்நிலையில், திருப்பூர் மாநகராட்சி, 41வது வார்டுக்கு உட்பட்ட காங்கயம் சாலை- ஐஸ்வர்யா கார்டன், காங்கேய நகர், அமர்ஜோதி சத்யமூர்த்தி நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த குடியிருப்புவாசிகள் இணைந்து 'விவேகானந்தர் குடியிருப்போர் நலச் சங்கம்' ஏற்படுத்தி கடந்த 3 மாதங்களாக செயல்படுத்தி வருகின்றனர்.

பாதுகாப்பு மற்றும் பிற நலனுக்காக அமைக்கப்பட்டுள்ள இச்சங்கம் மூலம் தற்போது ஊதிய அடிப்படையில் சமுதாய காவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்கான சமுதாய காவல் மைய திறப்பு விழா புதன்கிழமை நடந்தது. மையத்தை திறந்து வைத்து டிஎஸ்பி ஆர்.ராஜாராம் பேசியது:

எந்தவொரு நாட்டிலும் 30 மக்களுக்கு ஒரு காவலர்கள் இருந்தாலே பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்கிறது ஐ.நா.சபை. ஆனால் பல்வேறு சமுதாயம், கலசாரம், இனக்கூறுகள் கொண்ட இந்தியாவில் 675 பேருக்கு ஒரு காவலர் மட்டுமே உள்ளனர். இந்த வேறுபாட்டை சரிகட்ட நமக்கு நாமே திட்டத்தால் மட்டுமே முடியும்.

குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து சங்கம் அமைத்து அதன் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதால் இவ்வேறுபாட்டை தவிர்க்கலாம். அதை விவேகானந்தர் குடியிருப்போர் சங்கம் செய்திருப்பது வரவேற்புக்குரியது.

சமுதாயம் காவல் மையம் அமைப்பதோடு பாதுகாப்பை உறுதிப்படுத்திவிட முடியாது. அதற்கான விதிகளுக்கு நடைமுறையில் மதிப்பளிக்க வேண்டும். தவிர, பகல் நேரங்களில் அப்பகுதியில் வந்துசெல்லும் வெளிநபர்களிடம் கேள்வி எழுப்பதும்,  சந்தேகப்பார்வையுடன் விசாரிப்பதும் அவசியம். வீடுகளில் வேலைக்கு சேர்க்கும் முன்பு சம்பந்தப்பட்ட நபர்களின் பின்னணியை தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.

மேலும், வெளியே செல்லும்போது வீடுகளின் உள்புறத்தில் பூட்டுவது, வீடுகளினுள் விளக்குகளை எரியவிடுவது, பீரோக்களின் சாவிகளை யூகிக்க முடியாத இடங்களில் வைப்பதும் திருடர்களின் கவனத்தை திசை திருப்பும் வழிகள். இதுதவிர, வீடுகள் கட்டும் போதே பாதுகாப்பான கதவுகள் உள்ளிட்ட பொருட்களை தேர்வு செய்து பயன்படுத்துவதும் காலத்தின் அவசியம் என்றார்.

முன்னதாக நிகழ்ச்சிக்கு கவுன்சிலர் ஏ.ஷாஜஹான் தலைமை வகித்தார். காவல் ஆய்வாளர்கள் ஈஸ்வரன், வெற்றிவேந்தன், சங்கத் தலைவர் பி.சிவநாதன், தொழிலதிபர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நன்றி: தினமணி (11.08.2011)

காண்க: படங்கள்

No comments:

Post a Comment